திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி, கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டல பணிமனையிலிருந்து மாவட்டம் முழுவதுமுள்ள கிராமங்கள் தோறும் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கிருமிநாசினி தெளிக்கவும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பணியாளர்களுடன் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, உதவி ஆட்சியர் ஆனந்த்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மார்ச் 1அம் தேதி முதல் பல்வேறு நாடுகளிலிருந்து 767 பேர் வந்துள்ளனர். இவர்களில் 71 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். 696 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிகப்படியாக துபாய் நாட்டிலிருந்து 171 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் மாவட்டத்திலுள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்வதற்காக பத்து நபர்கள் கொண்ட பணியாளர்கள் அரசுப் பேருந்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று தினமும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டாக்ஸி போன்ற வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகள் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் மூலமாக 10 பணிமனைகளில் இருந்து 250 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் இப்பணிகள் அடுத்த மூன்று நாள்களில் செய்து முடிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் tiruvannamalai.nic.in/COVID19 என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்கள் குறித்து பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மூலம் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் பதிவு செய்பவர்கள் பயன்படுத்தி கொள்ளப்படுவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிப்பதற்காக ஒன்றியம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கண்காணிக்கும் புதிய செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தினமும் அவர்கள் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எவருமில்லை". இவ்வாறு தெரிவித்தார்.