திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில், அக்கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக்குமார் சட்டவிரோதமாக மணல் அள்ளிவருவதாக கூறப்படுகிறது.
இவர், ஏரியில் உள்ள கிராவல் மண்ணை அள்ளி வீட்டுமனை, பிளாட் அமைப்பது போன்றவைகளுக்காக விற்பனை செய்துவருகிறார்.
இதற்காக அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக அவர் கூறினாலும் இந்த அனுமதி கடந்த ஜூன் மாதமே முடிந்துவிட்டது. இருந்தும் தனக்குள்ள அரசியல் செல்வாக்கால், 3 அடி ஆழத்திற்கு மட்டும் தோண்டலாம் என்ற அரசு விதியை மீறி, 30 அடி ஆழத்திற்கு ஏரியைத் தோண்டி சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் சின்னச்சாமி, 10 கிராம மக்கள் ஏரிக்குச் சென்று சட்டவிரோத மணல் திருட்டை தட்டிக் கேட்டுள்ளனர். அவர்கள் மீது மணல் அள்ளியவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இது குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த, தச்சம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மணல் திருட்டு குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட நிர்வாகமும், வட்டாட்சியரும் வேடிக்கை பார்த்துவருவதாக குற்றஞ்சாட்டிய மக்கள், மணல் திருட்டைத் தட்டிக் கேட்டவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : வேலூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!