திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டும்; திமுகவின் இளைஞரணிச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவினையொட்டியும், 15 மாவட்டங்கள் பங்குபெற்ற குத்துச்சண்டை போட்டி நேற்று திருவண்ணாமலை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.
காலை முதல் சீனியர், யூத், ஜூனியர், சப் ஜூனியர் மற்றும் கப் பாக்சிங் ஆகிய பிரிவுகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன.
ஐந்து பிரிவுகளின்கீழ் நடைபெற்ற குத்துச்சண்டைப்போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு வெற்றிக்கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற நடுவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.
இந்த குத்துச்சண்டை போட்டியில் திருவண்ணாமலை மாவட்டம் மூன்றாம் இடம், சென்னை அணி இரண்டாம் இடம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு அர்ஜூனா விருது பெற்ற வீரர் தேவராஜன், தமிழ்நாட்டில் முதல் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் பெற்ற வீரர் மதிவாணன் மற்றும் திருவண்ணாமலை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:மகளின் திருமணத்தை மீறிய உறவால் தாய், தந்தை கொலை