சென்னை: ஆவடி பட்டாபிராம் பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.18) நடந்த அண்ணன், தம்பி மர்ம நபர்களாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினை விவாகரத்தில் கவன குறைவாக இருந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரெட்டைமலை சீனிவாசன் (27), ஸ்டானின் (24) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி போலீசார், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், முன்பகை காரணமாக மர்ம கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது வாக்குவாதம் முற்றியதில் மர்ம கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரெட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டானின் கொலை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றத்தைத் தடுக்க தவறியதாக பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணன், தம்பி இருவரையும் ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. ஆவடியில் பயங்கரம்!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்குப் பதில் பட்டாபிராம் காவல் ஆய்வாளராக திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டும், சோழவரம் காவல் ஆய்வாளர் திருவேற்காடு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்யவும், அவர்களை சிறையில் அடைக்கவும் காவல் ஆணையாளர் சங்கர் காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தற்போது, அதனைப் பின்பற்றாததால் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் உட்பட்ட காவல் எல்லையில் இரட்டை கொலை நடந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினை விவாகரத்தில் கவனக் குறைவாக இருந்தால் இனி இது போன்று கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.