ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள சேவூர் பகுதியில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் போக்குவரத்து அலுவலராக சிவானந்தம் என்பவரும் மோட்டார் வாகன ஆய்வாளராக சிவக்குமார் என்பவரும் பணிபுரிந்துவருகின்றனர்.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக இருந்த இடம் 8 மாதங்களுக்கு முன்பாக ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அலுவலகத்தின் கீழ் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யார், வெம்பாக்கக்கம் உள்ளிட்ட தாலுக்காக்கள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது.
இந்நிலையில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மீது வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் திடீரென வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்து கதவை உள்பக்கமாக தாழிட்டு 4 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தின் உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும், வெளியே இருந்து யாரும் உள்ளே வருவதற்கும் அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றது. இந்த 4 மணி நேர சோதனையில் கணக்கில் வராத பணம் நான்கு லட்சத்து பனிரெண்டாயிரம் பணம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!