திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை (திமுக), ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்), மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர், என். அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் கோடி, அதாவது மூன்று ஆண்டுகளில் 3,000 கோடி அளவிற்கு வளர்ச்சி நிதி இந்த மாவட்டத்திற்கு வரப்பெற்றது. அதை முறையாக பயன்படுத்தி இருந்தால் இன்றைக்கு மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவு பெற்றிருக்கும்.
ஆனால் பல பகுதிகளில் அடிப்படை வசதி நிறைவு பெறவில்லை. அதற்கு காரணம் இந்த மூன்று ஆண்டு காலத்தில் திட்டங்களின் நிதியில் ஏற்பட்ட முறைகேடுகளால் பணிகள் முழுமை அடையாத சூழ்நிலை இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:ராமர் கோயில் கட்ட நன்கொடை கொடுக்க மறுத்த மருத்துவர் பணிநீக்கம்!