திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் 14. 69 லட்சம் ரூபாய் மதிப்பில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் குளிரூட்டும் மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்தார்.
தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலக வளாகத்தில், ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள நவீன ஆவின் பாலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும் பால் உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சி என்கின்ற கருத்தரங்கம், வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பின்னர் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு. பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூரில் அனுராதாவின் கால்கள் அதிமுகவினரின் கொடிக்கம்பத்தில் நசுங்கிய நிலையில், திருவண்ணாமலையில் ராஜேந்திர பாலாஜியை வரவேற்று கொடிக்கம்பங்கள் நடப்பட்டது அப்பகுதி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை, இரும்புக் கம்பிகளால் ஆன ஆளுயர கொடிக் கம்பங்களை சாலையின் நடுவிலும், இரு பக்கங்களிலும் மூன்று சாரையாக தொண்டர்கள் நட்டு வைத்திருந்தனர்.
பௌர்ணமி தினத்தையொட்டி ஏராளமான மக்கள் கிரிவலம் செல்வதால் சாலையின் இரு பக்கங்களிலும், நடுவிலும் கட்டப்பட்டுள்ள இரும்புக் கொடிக் கம்பங்கள் சாய்ந்து ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்லக்கூடிய நேரம் என்பதாலும், கடைநிலை ஊழியர் முதல் உயர் அலுவலர்கள் வரை பயணிக்கக்கூடிய முக்கியமான சாலை என்பதை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கொடிக் கம்பங்கள், வாழை மரங்களை மூன்று சாரையாக சாலையில் நட்டு வைத்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், முகம் சுளிக்கும் வகையில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘எங்களின் ஆதரவு ஸ்டாலினுக்குதான்!’ - அறிவாலயத்தில் திருநங்கைகள் பேட்டி