திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று (பிப்.19) நடந்த மயானக் கொள்ளை விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேர் மண்டை உடைந்து படுகாயமடைந்தனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகாசிவராத்திரி அடுத்த நாள் வரும் அமாவாசையன்று திருவண்ணாமலையில் உள்ள மயானத்தில் மயான கொள்ளை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த மயான கொள்ளை திருவிழாவில் திருவண்ணாமலை, மணலூர் பேட்டை சாலை, சிவன்பட வீதி, புதுத் தெரு மாரியம்மன் கோயில் ஆகிய 4 அம்மன் கோயில்களில் உள்ள அங்காளம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பின்னர், ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள அங்காள அம்மன் மாடவீதிகளின் வழியாக வந்து மயானத்தை அடைந்த உடன் மயான சூரை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஈசான்யம் அருகே இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று நபர்களுக்கு மண்டையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் அவர்களைச் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனா். மேலும் மோதலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினா் தடியடி நடத்தி கலைத்தனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாளையப்பட்டு அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா