திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சின்னசெங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனுசாமி (35), இவரது மனைவி கீதா. இவர் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு பாஸ்கர் (9), ஹரிஹரன் (6) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஏப். 18) கீதா, ஆடுகளை மேய்க்க சின்னசெங்காடு குப்பத்து ஏரி பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவருடன் பாஸ்கரும், ஹரிகரனும் சென்றுள்ளனர்.
ஏரியில் மூழ்கி சாவு
ஆடுகளைப் பார்த்துக்கொள்ளும்படி மகன்களிடம் கூறிவிட்டு, அருகில் உள்ள விவசாய நிலத்தில் நாற்று நடும் பணிக்கு சென்றுள்ளார் கீதா. மதிய உணவிற்கு மகன்கள் வராததால், கீதா அவர்களைத் தேடி ஏரிக்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு ஆடுகள் மட்டும் இருந்தன.
ஏரியின் ஓரத்தில் மகன்களின் காலணிகள் மட்டும் கிடந்தன. இதனால் சந்தேகமடைந்த கீதா, அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து நீரில் இறங்கி தேடச் செய்தார். அப்போது பாஸ்கர், ஹரிஹரன் இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதுகுறித்து அனக்காவூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு உயர் ரக மதுபானங்கள் திருட்டு!'