திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் சுபா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்நிலையில் மே 15ஆம் தேதி சுபா வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் சுபா குறித்து அவரது பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவிற்குட்பட்ட பெரியமணிஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பவர், சுபாவை திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து இருவரையும் தேடிவந்தனர். காவல் துறையினர் தேடுவதை அறிந்த சுரேஷ் நேற்று சுபாவை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் பேருந்து நிலையம் வந்தார்.
இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சுரேஷை சுற்றி வளைத்து பிடித்து இருவரையும் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண் காவல் ஆய்வாளர் ரமணி சுபாவிடம் நடத்திய விசாரணையில், ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள சுரேஷ், இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேருந்தின் மூலமாக விழுப்புரம் திரும்பியுள்ளார். இதே சமயத்தில் சுபா, தனது சொந்த ஊரான திருவண்ணாமலை, ரெட்டிபாளையத்தில் உள்ள பெற்றோரிடம் சென்றுகொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஓடும் பேருந்தில் சுரேஷ், தீபா ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் தங்களது செல்போன் நம்பரை பகிர்ந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
பின்னர் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திய சுரேஷ், சுபாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி சுரேஷ் மீண்டும் நேர்காணலில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளார். அப்போது, சுபாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, அவரை வரவழைத்து அம்பத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் பிறகு அங்கு உள்ள ஒரு கோயிலில் சுபாவிற்கு தாலி கட்டியதோடு பாலியல் தொல்லையும் கொடுத்ததாக சுபா தெரிவித்தார். பின்னர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.