திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 30). இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ஆரணி பஜார் வீதிக்குச் சென்ற தேவராஜ், வரும் வழியில் ஆரணி ஆற்றில் நீந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் வெள்ள நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார்.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து உடனடியாக காவல், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அலுவலர்கள் சம்பத், ராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி இளைஞர் தேவராஜை உயிருடன் மீட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி பெருவாயல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மனதிலிருந்து மறைவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பெண்களிடம் தங்கச்சங்கிலி பறித்த இளைஞர் கைது