திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் சபரிதா என்ற பெண்ணுடன் தனியாக வசித்து வந்துள்ளார். சபரிதா தனது கணவர் பசுபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து கணேஷ்குமாருடன் வசித்து வந்துள்ளார். இதனால், பசுபதிக்கும், கணேஷ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கணேஷ்குமார் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து பசுபதி தனது நண்பர்களுடன் வந்துள்ளார். கணேஷ்குமாரை கொலை செய்யும் திட்டத்தோடு வீட்டிற்குள் புகுந்த பசுபதி, பட்டப்பகலில் சபரிதா கண்முன்னே கணேஷ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார். இதில் சரிந்து விழுந்த கணேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, சபரிதாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் பசுபதி தனது நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் சபரிதாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: செங்கல்பட்டில் ஐந்து காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதி!