திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் நாளுக்கு நாள் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. குடிப்பதற்கும், வீட்டின் அடிப்படை தேவைக்கும் தண்ணீர் இல்லாததால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணியில் 21ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததால், அப்பகுதி பெண்கள், காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், குடிநீர் வசதிக்கு நிரந்தர தீர்வு கொடுத்தால்தான் இடத்தை விட்டு நகர்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அரங்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், திமுக கட்சி சார்பில் ட்ராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தண்ணீர் ட்ராக்டர் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மக்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்த ஜெகத்ரட்சகனுக்கு மக்கள் தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர். இதன் பின்னர் ஜெகத்ரட்சகன் வீடு வீடாக சென்று, தேர்தலில் வெற்றிப் பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.