செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் சென்னைவாசிகள் அச்சப்படத் தேவையில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகவுள்ள நிலையில் தற்போது 22 அடியை நெருங்கியுள்ளது.
இதனால், இன்று (நவ. 25) ஏழு மதகுகள் திறக்கப்பட்டு, ஆயிரத்து 130 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு இரண்டாயிரத்து 889 மில்லியன் கனஅடியாகவுள்ள நிலையில் தற்போது நீர்வரத்து நான்காயிரத்து 380 கனஅடியாக உயந்துள்ளது.
நேற்று (நவ. 24) இரவுமுதல் பெய்த கனமழையின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் இன்று (நவ. 25) உடனடியாக 22 அடியை நெருங்கியுள்ள நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது காவனூர், குன்றத்தூர், அடையாறு வழியாக கடலில் போய் இணைகிறது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் நான்காயிரம் கனஅடிக்கும் மேலாக நீர்வரத்து வந்துகொண்டிருகிறது. இதனால், பொதுப்பணித் துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மேற்பார்வையில் தொடர்ந்து பார்வையிட்டுவருகின்றனர்.
நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கச் செல்லக் கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட நீரானது சிறிது சிறிதாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்!