திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் அருகே ஆந்திர மாநில பகுதியான கிருஷ்ணாபுரம் உள்ளது. இப்பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக அம்மபள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து இந்த அணையிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக, அம்மாநில பொதுப்பணித் துறை அலுவர்கள் முடிவ செய்து, தமிழ்நாடு எல்லையிலுள்ள பள்ளிப்பட்டு வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்டோரா மூலம், பொதுமக்கள் ஆற்றைக் கடக்கக் கூடாது, நீர்நிலையில் தண்ணீர் வரும்போது கால்நடைகளை ஆற்றின் அருகில் அழைத்துச் செல்லக் கூடாது, மனிதர்கள் யாரும் ஆற்றில் குளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 1) அம்மபள்ளி அணையிலிருந்து, ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்புப் பூஜைகள் செய்து இரண்டு மதகுகள் வழியாக அணையிலிருந்து நீரைத் திறந்துவைத்தார்.தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நீர் ஆந்திராவிலுள்ள மற்றொரு பகுதிக்குச் சென்று தடுப்பணையைத் தாண்டியே தமிழ்நாடு எல்லைக்குள் வரும் என்பதால், இன்று இரவுக்குள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வர வாய்ப்பில்லை.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால் மீண்டும் இதே போல அம்மபள்ளி அணை திறக்கப்பட்டால் மட்டுமே தமிழ்நாடு எல்லைக்கு தண்ணீர் கிடைக்கும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெரியாறு நீர் மின்நிலையம்!