திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமம் பெருமாள் கோயில் தெருவில் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க சிகாமணி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேர குழந்தையுடன் வசித்து வந்தார்.
விவசாய கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (ஜன. 09) வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். அவருடைய மனைவிக்கு அருகில் பீரோ இருந்ததால் அவர் லேசான காயங்களுடன் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சிகாமணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் வீட்டின் மண்சுவர் ஈரப்பதத்தில் இடிந்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய சிகாமணியின் மனைவி, வறுமையில் இருந்த காரணத்தினாலேயே கல்சுவர் வீடு கட்டி வாழ முடியாத நிலையில் இருந்தோம். எங்களுக்காக வருவாய் ஈட்டி வந்த கணவரும் இறந்துவிட்டதால் நாங்கள் மேலும் வறுமையிலும் உயிர் பயத்திலும் தவித்து வருகிறோம் என்றார்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வறுமையில் வாடும் இந்த குடும்பத்திற்கு அரசின் இலவச வீட்டினை வழங்கவேண்டும். உயிரிழந்த சிகாமணியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மண்பாண்டத் தொழிலாளர்கள்: கை கொடுக்குமா அரசு?