திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான ரத்னா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி முன்னிலையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் பொதுத்தேர்தல் மற்றும் பூந்தமல்லி இடைத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களித்தல், பணம் பரிசு பெறாமல் வாக்களித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர். இந்த பேரணி பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மேள, தாளங்களுடன் சென்றது. பின்னர் ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நாடகம் மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் தனுஜா டயானா, கிராம நிர்வாக அதிகாரி மகேஷ், படுர் கிராம நிர்வாக அதிகாரி அருள், கிராம உதவியாளர் ராமநாதன் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.