சென்னை அடுத்த புழல் சக்திவேல் நகரை சேர்ந்த கரோனா பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை புழல் சுகாதாரத்துறையினர் திருவள்ளூர் மாவட்டம் கன்னடபாளையம் சுடுகாட்டில் எரிப்பதற்காக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் உயிரிழந்தவரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு வீதியில் திரண்டு எரிக்கவிடாமல் தடுத்தனர். ‘கரோனா பாதித்தவர்களின் உடலை எரிக்கும்போது அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காற்றின் மூலம் எங்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்படும்’ எனத் தெரிவித்தனர்.
கரோனா பாதித்தவரின் உடலை 15 அடி ஆழத்தில் புதைத்துவரும் நிலையில் தங்கள் பகுதியில் மட்டும் புதைக்காமல் எரிப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த புழல் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை புதைப்பதாக கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.
கடந்த வாரம் இந்த சுடுகாட்டில் கரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை எரிக்கும் போது உடன் இருந்த ஒருவர் பாதுகாப்பு உடையை அங்கேயே கழட்டி விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவுக்கு இரண்டாவது காவலர் உயிரிழப்பு