திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் எண்ணெய் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையிலிருந்து அதிகப்படியாக வெளியேறும் கரித்துகள்கள் குடிநீரில் கலக்கிறது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் சிறுவர் முதல் பெரியவர் வரை தோல் நோய்கள், இருமல், மூச்சுத் திணறல், கல்லீரல் செயலிழப்பு போன்ற பல்வேறு உடல் உபாதைகளால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
குடிநீரில் கலக்கும் கரித்துகள்
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுவைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீரில் கலக்கும் கரித்துகள்களால் அண்மையில் ஆட்டுக்குட்டிகள் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலை முற்றுகை
கிராம மக்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து ஓரிரு தினங்களில் மாசு கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட புதுகுமுடிபூண்டி கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் கணித ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தொடங்கியது!