திருவள்ளூர்: கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவு காவல் துறையினர் ரோந்து பணியின் போது டாஸ்மாக் கடையின் சுவறு துளையிடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த துளையின் வழியாக காவல் துறையினர் டார்ச் லைட் அடித்து பார்த்த போது அங்கு 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் துளையின் வழியாக வெளியேற்றிய காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தைச் சேர்ந்த முனியன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
மேலும் மது பாட்டில்களையும், திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்ற இருவர் சாவகாசமாக மது அருந்திய போது காவல் துறையினரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ சூட் நடத்திய இளைஞர் கைது