திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீத அம்மாள். இவர், கடந்த மாதம் 30ஆம் தேதி அன்று தேக்குத் தோப்பில் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக, திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இந்த சம்பவத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவருக்கும் தொடர்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகித்து, அவரை தேடி வந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமணத்தை மீறி உறவு கொண்டிருந்த சுரேஷ் என்ற நபருடன் அவர் தங்கியிருப்பதாகவும், பின்னர் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே தனது உறவினரை சந்திக்க இருவரும் வருவதாகவும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து அப்பகுதிக்குச் சென்ற காவலர்கள் சிவகாமி, சுரேஷ் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், நவநீத அம்மாளிடம் நகை கடன் வாங்கியதை அவ்வப்போது கேட்டு தன்னை தொல்லை செய்ததால் தனும், சுரேஷும் கழுத்தில் துண்டை கொண்டு இறுக்கி கொலை செய்தோம். அவர் கழுத்தில் அணிந்திருந்த பத்து சவரன் நகைகளை எடுத்துச் சென்றோம். பின்னர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நகைகளை அடகு வைத்து அதில் ஒரு பகுதி பணத்தை இருசக்கர வாகனம் வாங்கினோம் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ஆறு சவரன் தங்க நகை மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.