திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள ஸ்ரீமன் அய்யா வைகுண்டர் திருக்கோயிலில் 21ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. அதன் இறுதி நாளான நேற்று சாமி தரசனத்திற்காக கோயில் வந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும் என்று பாஜக சார்பில் தமிழ்நாடு அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று அதனை சிறப்பாக செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.
ரஜினிகாந்த், சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள், மத்திய அரசு அதற்கான ஒரு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது. இதில் எந்த சரத்து பிடிக்கவில்லையோ அதை பதிவு செய்ய வேண்டியது அவர்கள் கடமை, ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது தரமான கல்வியை கொண்டு வருவதில் பாதகத்தை ஏற்படுத்தும், கல்வியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் அரசுக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது கொண்டுவர உள்ள புதிய கல்விக்கொள்கை கல்வியில் சமமான நிலையை உருவாக்க வழி வகுக்கும் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.