திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலையான புதிய வகை ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, ஜன.9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூன்றாவது வாரமாக நேற்றும் (ஜன.23) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர இதர காரணங்களுக்காக வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில், திருவள்ளூர் சுற்று வட்டார கிராமங்களில் ஊரடங்கு தடையை மீறி இறைச்சிக்கடைகள் நடத்திவந்த 11 கடை உரிமையாளர்களுக்கு திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் 36 ஆயிரம் அபராதம் விதித்தார் மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்தார்.
இதனிடையே, சில பகுதிகளில் தாசில்தார் வாகனம் வருவதைக் கண்டு இறைச்சி வாங்க வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதேபோல் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளான பால், உணவு, மருந்து கடைகள் ஆகியவை செயல்பட்டன.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி நகரின் பல்வேறு இடங்களில் தேனீர், பெட்டிக்கடைகளை திறந்துவைத்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர், வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வாரம் விடுமுறை? - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை