திருவள்ளூர்: கடந்த சில மாதங்களாக கணிசமாக குறைந்து வந்த கரோனா தொற்று, கடந்த ஒரு வாரமாக வேகமாகப் பரவி வருகிறது.
சில நூறு எண்ணிக்கையில் இருந்த பரவல், தற்போது ஆயிரமாக உயர்ந்து வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு அங்கமாக ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் ஆர்வலர்கள், தற்போது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், ஏழைகளின் சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
இந்த நீர்த்தேக்கத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா ஆர்வலர்கள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதைப் போக்கிச் செல்வது வழக்கம்.
மேலும் பலர் இங்கு குடும்பத்துடன் வந்து உணவு சமைத்து சாப்பிட்டுச் செல்வதும் வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் ஜனவரி மாதத்தில் நீர் இருப்பு வெகுவாக குறைந்திருக்கும்.
இந்த ஆண்டு பெருமழை காரணமாக பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி, கடல்போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
தற்போது இதைக்கண்டு மகிழ முடியாமல், மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இருப்பினும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு விதிமுறை மீறல்: ஒரு வாரத்தில் ரூ.3.45 கோடி அபராதம்!