1890ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜனோபகார சாஸ்வத நிதி லிமிடெட் திருவள்ளூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 130 ஆண்டுகளாக கோல்ட், ஜுவல்லரி, அடமான கடன் போன்ற அடிப்படையில் மக்களுக்கு உதவும் வகையில் 90 பைசா வட்டி விகிதத்தில் கடன் அளித்து வருகிறது.
ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், 7787 அங்கத்தினர்களையும் கொண்டு இயங்கி வரும் ஜனோபகார சாஸ்வத நிதி லிமிடெட், கடந்த 10 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற 130ஆவது ஆண்டு பேரவை கூட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனோபகார சாஸ்வத நிதி லிமிடெட் இயக்குநர்கள் கூறுகையில், "130 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிதி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 400 மடங்குக்கும் மேல் வளர்ச்சி பெற்றுள்ளது. திருவள்ளூர், மணவாளநகரில் இயங்கி வரும் இந்த நிதி நிறுவனம், தற்போது ஒன்றரை கோடி மதிப்பீட்டில் ஊத்துக்கோட்டை பகுதியில் கிளைகள் தொடங்கப்படும்.
பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய சேமிப்பு திட்டங்கள், பல ஆண்டுகளாக 25 விழுக்காடு பங்காதாயம் வழங்குதல், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி போன்ற பல்வேறு சலுகைகளுடன் இயங்கி வரும் ஜனோபகார சாஸ்வத நிதி லிமிடெட், கரோனா காலகட்டத்திலும் ஊழியர்களுக்கு 100 விழுக்காடு சம்பளம் வழங்கியது.
ஏழை, எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம், இலவச கண்புரை அறுவை சிகிச்சை, கண்ணாடி வழங்குதல், பல் சிகிச்சை, பசுமை திட்டத்துக்காக இலவச மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை இந்நிறுவனம் செய்து வருகிறது" என்று தெரிவித்தனர்.