திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகனின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மூன்று நாள் தெப்பத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரவண பொய்கையில் நடந்த முதல் நாள் தெப்பத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக அதிகாலை மூன்று மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபட்டனர்.
மாலை உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மழை படிகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கையை அடைந்ததைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. நாளை இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவும், நாளை மறுநாள் மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.