திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியையடுத்த சுண்ணாம்புகுளம் அரசினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவியரின் சுத்தம் சுகாதாரத்தைப் பேணிக் காப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு மற்றும் கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஔவை கிராம நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். சுண்ணாம்புகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சரணி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கழிப்பறை கட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மூன்றாம் நான்காம் வகுப்பு மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி பள்ளி மேலாண்மைக்குழு சமூக ஆர்வலர் எஸ் எம். சங்கர், ஆயிரம் மரச் செடிகளை பள்ளிக்கு வழங்கினார்.
சுண்ணாம்புகுளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மலர்க்கொடி, கழிப்பறை விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்தார். இப்பேரணி சுண்ணாம்புகுளத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஒபசமுத்திரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாலயா பாண்டியன், ஔவை கிராம நலச் சங்க ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சச்சு, பள்ளியின் நலக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: ரீல் தலைவர் ரஜினி..! ரியல் தலைவர் எடப்பாடியார்..! - அதிமுக பதிலடி