திருவள்ளூர் மாவட்டத்தில் திருவலாங்காடு ஒன்றியம் உள்ளது. அங்கு குப்பம் கண்டிகை ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, இரண்டாவது வார்டில் போட்டியிட அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேமா, சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஊராட்சியானது பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதாகும். இதற்கு மேற்கண்ட மூன்று பேரும் வேட்புமனு தாக்கல் செய்ததற்கான முறையான அறிவிப்பு ஊராட்சி மன்ற அலுவலகம் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில் பிரேமா, சுரேஷ், கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு விவரங்களை அளித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று இரவு இரண்டாவது வார்டில் போட்டியிட இருந்த கார்த்திகேயன் பெயர், ஆன்லைன் மூலம் மூன்றாவது வார்டுக்கு நூதன முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் மாற்றி போட்டு மோசடி செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதைக் கண்டிக்கும் விதமாக கார்த்திகேயன் மற்றும் அப்பகுதியினர் ஒன்று திரண்டு திருவலாங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளூர் அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோசடியில் ஈடுபட்ட அருங்குளம் பஞ்சாயத்து ஊராட்சி செயலர் ஸ்ரீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் கார்த்திகேயன் பெயரை இரண்டாவது வார்டிலேயே சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் சமரசம் பேசியதில் அப்பகுதியினர் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படியுங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்