திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காசிநாதன் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துவருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி முடிந்தவுடன் பள்ளி அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடச் செல்வது வழக்கம்.
அந்த மைதானத்தில் பள்ளிக்குச் சொந்தமாக புதிய கட்டடம் கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்டதால் பெற்றோர், ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் மாணவர்கள் தலைமையாசிரியர் விஜயாவிடம் கேட்டதற்கு, தன் சொந்த பணத்தில்தான் பள்ளிக் கட்டடம் கட்டுவதாகவும், அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை என்றும் கூறினார்.
பின்னர் பொதுமக்கள், 'திருத்தணியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய பள்ளிக் கட்டடம் இருந்த இடத்திலேயே புதிய பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும்' என்று கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர். அதனடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) பவணந்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.