திருவள்ளூர் மாவட்டம் தல்லெறிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிவேல். இவரது மகனான ஆனந்த் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பாலகுமாரின் கூட்டாளியான இவர், இன்று அதிகாலையில் தல்லெறிப்பாளையம் அருகே உள்ள தைலத்தோப்பு ஒன்றில் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் ஆனந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.