திருவள்ளூர் அடுத்த காக்களூரில் நேகா என்ற போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ். இவரது மனைவி அனிதா இவர்களுக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பிற்பகலில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் போட்டோ ஸ்டுடியோக்குள் புகுந்து தினேஷின் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர்.
தினேஷின் மனைவி அனிதா அளித்த தகவலின் பேரில், பிரகாஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது மனைவி கோட்டீஸ்வரியுடன் ஸ்டூடியோ அமைந்துள்ள காக்களூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது தினேஷிக்கும் கோட்டீஸ்வரிக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பிரகாஷ் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் அவர்களின் அந்த உறவு நீடித்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், மனைவியை சரமாரியாக கத்தியால் தாக்கி குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோட்டீஸ்வரி தற்போது சிகிச்சையில் இருக்கும் நிலையில், மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் மூன்று மாதங்கள் இருந்த பிரகாஷ், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பிணையில் வெளியே வந்துள்ளார்.
இதனையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷை கொலை செய்ததை பிரகாஷ் காவல் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சூர்யா (27), எண்ணூர் மகேஷ் (25), எர்ணாவூர் கார்த்திக் (25) கத்திவாக்கம் சுனாமி குடியிருப்பு ராஜி (25) ராயபுரம் அப்துல் அஜீஸ் ஆகிய ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் பிரகாஷையும் சேர்த்து அவர்கள் ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!