தமிழ்நாட்டை உலுக்கி வரும் கரோனா இரண்டாவது அலையால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. குஜராத்தில் நோயாளிகளுக்கு படுக்கை, வென்டிலேட்டர் வசதியில்லாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
அங்கே இறப்பு விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில் உடல்கள் பொது இடங்களில் இருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருவதால் மக்களிடையே இரண்டாவது அலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
இது குறித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி கூறுகையில், "திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கரோனா தொற்றுநோயாளிகளுக்கு என தனியாகப் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
இதுவரை மருத்துவமனையில் 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 500 பேர் வரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
கரோனா நோயாளிகள், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, தொண்டை அடைப்பு போன்ற உபாதைகள் இருந்தால் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை மேற்கொண்டு குணம் பெறலாம்.
தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் நேரடியாக வந்து போட்டுக் கொள்ளலாம். அரசு மருத்துவமனை தவிர பனிமலர், ஏசிஎஸ், அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஆகிய இடங்களில் நோயாளிகளுக்கான ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை தயாராக உள்ளது.
மொத்தத்தில் இந்தக் கரோனா தொற்று இரண்டாவது அலையை எதிர்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளன" என்று கூறினார்.
இதையும் படிங்க: பாம்புக்கடியால் உயிருக்குப் போராடிய குழந்தைகளைக் காத்த அரசு மருத்துவர்கள்