இந்தியா முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதையொட்டி அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடி, காவல் துறையினர் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ளவேடு, பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று பார்வையிட்டார்.
இதன்பின்னர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்த வழியாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு குறித்து முழுமையாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் அதிகளவில் கிருமிநாசினிகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளைத் தவிர பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் 15 சோதனைச் சாவடிகளும், மாவட்டத்திற்குள் 13 சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், நபர்கள் முழுமையாக கண்காணிப்படுவார்கள். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை முழுமையாகப் பரிசோதித்து அவர்களுக்கு அறிகுறி தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபரின் வீடு என்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டும்" என்று தெரிவித்தார்.
உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய காவல் துறை
திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் நேற்று மாலை முதல் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாவட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மாவட்டத்தின் பிராதனப் பகுதிகள் அனைத்தும் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.
144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரியும் நபர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், சாலையோரப் பகுதிகளில் உணவில்லாமல் தவித்த மக்களுக்கு காவல் துறை சார்பாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பழவேற்காட்டில் பொதுமக்கள் அலட்சியம்
பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பழவேற்காடு மார்க்கெட் பகுதியில் கூடுவர். இந்நிலையில், அப்பகுதியில் போதிய காவல் பாதுகாப்பு இல்லாததால் பொதுமக்கள் அலட்சியமாக ஐந்து பேருக்கும் மேலாக கூடுகின்றனர்.
முன்னதாக, தூய்மைப் பணியில் ஈடுபட்ட பழவேற்காடு ஊராட்சி மன்றத் தலைவரை காவலர் ஒருவர் ஒருமையில் பேசி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பழவேற்காடு ஊராட்சி சார்பில் பொன்னேரி காவல் உதவிக் கண்காணிப்பாளரிடமும், மீஞ்சூர் ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் சார்பில் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அரசின் அனுமதி கிடைத்தால் அதை செய்ய தயாராக இருக்கிறேன் - கமல் ட்வீட்