தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து திருவள்ளூரில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இருப்பினும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது, " திருவள்ளூரில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 575 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில், 17 ஆயிரத்து 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 11.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 4 ஆயிரத்து 133 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு பணிகளுக்காக 37 அவசரகால ஊர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை பணிகள் அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று கண்டறிவதற்காக மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூவிருந்தவல்லி நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 26 பரிசோதனை வாகனங்கள் ( Sample Collection ) பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவரை, 13 ஆயிரத்து 214 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மூவாயிரத்து 513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: கேரளா நிலச்சரிவு: உயிரிழந்த தமிழர்களின் இல்லங்களில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்!