திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தத் திருக்கோயிலில் காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருடத்திற்கு ஒருமுறை உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை தாயார்களுடன் மலைக்கோயிலிருந்து படிக்கட்டு வழியாக தூக்கி வரப்பட்டு, தங்க ஆபரணம் புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு ஏலக்காய் மாலை அணிவிக்கப்பட்டு திருத்தணி முழுவதும் நகரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருத்தணி பஜார் வீதியில் பக்தர்கள் வண்ண வண்ண கோலமிட்டு, தேங்காய் பழம் உடைத்து தங்கள் வீட்டு அருகே வந்த முருகப் பெருமானை வழிபாடு செய்தனர். இதில் திருக்கோயில் அலுவலர் பாஸ்கர், அருணாச்சலம், வேல், சுமைதாரர்கள் வினோத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக காவல் துறையினருடன் சென்றனர். இந்நிகழ்ச்சியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். வருடத்திற்கு ஒருமுறை காணும் பொங்கல் திருவிழாவில் முருகப்பெருமான் திருத்தணி நகர வீதி உலா வருவது வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாலை திருத்தணி சண்முக தீர்த்தத்தின் அருகே சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றன.
பக்தர்கள் முன்னிலையில் நள்ளிரவு முருகப்பெருமான் மலைக்கோயிலுக்கு தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு மலைக்கோயிலில் சுமைதாரர்கள் மூலம் தூக்கிச் செல்லப்படுவர் என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பழவேற்காட்டில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். மெரினா கடலில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டதால் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலைக்கள்ளன் - மக்கள் திலகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்