திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்தசஷ்டி விழா தொடங்கி ஏழு நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி காலை துவங்கி, முதல் நாள் மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. 16ஆம் தேதி, மூலவருக்கு பட்டாடை, தங்ககவசம் அணிவித்து சிறப்பு பூஜையும், 17ஆம் தேதி திருவாபரணமும், 18ஆம் தேதி வெள்ளிக் கவசமும், 19ஆம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறுபடை வீடுகளில் சூரசம்காரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோயில் முருகன் சினம் தனித்த இடம் என்பதால் ஆறாம் நாளான இன்று, காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை லட்சார்ச்சனையும், மாலை 5 மணியளவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.
கடந்த காலங்களில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தசஷ்டி விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிபதிகள் முன்னிலையில் திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி உற்சவ திருவிழா!