திருவள்ளூர்:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த கோயிலில் 2023 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாகத் திருக்கோயில் மலை அடிவாரத்தில் உள்ள சரவணன் பொய்கை திருக்குளத்தின் பகுதியிலிருந்து ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் 365 படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் படிகளுக்கு சிறப்பு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும் திருக்கோயில் துணைய ஆணையர் பா. விஜயா தேங்காய் பழம் கொண்டு படிக்கட்டுகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுக் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பஜனை இசைத்தவாறும் திருப்புகழ் பாடியும் படி பூஜை செய்யும் முருக பக்தர்களை திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து வரவேற்றனர்.
மூலவர் முருகப்பெருமான் தங்க கவசம் தங்க ஆபரணம் வைரம் மற்றும் வைடூரியம் போன்ற ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார். மலைக்கோவிலில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மலைக் கோயிலில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிச.31)இரவு மலைக்கோயில் முருகப்பெருமானை தரிசனம் செய்ய இரவு முழுவதும் திருக்கோயில் திறந்திருக்கிறது என்று திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு டிசம்பர் 31 , ஜனவரி 01 பிறக்கும் நள்ளிரவு நேரத்தில் மூலவர் முருகப்பெருமானுக்குச் சிறப்பு தீபம் ஆராதனை நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். திருத்தணி முழுவதும் மற்றும் திருக்கோயில் வளாகத்தில் டி.எஸ்.பி விக்னேஷ் தலைமையில் 500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:2022 ஆண்டுக் கண்ணோட்டம் - ஓராண்டில் தமிழக அரசு செய்தது என்ன?