திருவள்ளூர்: அனல் மின் நிலையத்தின் நச்சு சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் நச்சு சாம்பல் கழிவு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, சாம்பல் கழிவுகள் வெளியேறுகின்றன. இதில் செப்பாக்கம் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள 120 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க மின்வாரியமும் அரசும் நடவடிக்கை எடுக்கக்கோரி அனல் மின் நிலைய வாயில் முன்பாக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் வெளியேறி, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தி வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து பலமுறை முறையிட்டும் தீர்வு ஏற்படவில்லை என்று கூறிய கிராம மக்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உரிய தீர்வு காண உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காத மின் வாரியத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலர்கள் உரிய தீர்வு காணாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தனர்.