திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. இவரது கணவர் பாஸ்கர்; மாற்றுத்திறனாளி. பானுமதி அதே பகுதியில் தனக்குச் சொந்தமான கட்டடத்தை திராவிட பாலு என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில், கடையை மேலும் விரிவுபடுத்தவும், சொந்த தேவைக்காகவும் ரூ.2 லட்சம் தேவைப்பட்டதால் பானுமதி திராவிட பாலுவிடம் கேட்டுள்ளார். திராவிட பாலு, அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வம் என்ற ஆசிரியரிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார்.
மறுநாள் காலை பானுமதி வீட்டிற்கு வந்த பைனான்சியர் செல்வம், 2 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 5 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், அதில், திராவிட பாலு 3 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து திராவிட பாலு வாங்கியதாகக் கூறிய 3 லட்சத்தையும் தானே வருவதாகக் கூறி வெற்று பத்திரத்தில் பானுமதி கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், அடமானம் வைத்ததை மீட்க சென்றபோது, வாங்கிய 5 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் பத்திரத்தை தர முடியும் என செல்வம் கூறியுள்ளார். மேலும், பானுமதியின் கட்டடத்தை வேறு யாருக்கோ விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனையடுத்து, பானுமதி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பானுமதி புகார் அளித்துள்ளார். அடகு வைத்த சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பைனான்சியர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பானுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை: 2 பேரிடம் விசாரணை!