திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த குப்பம்மா சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை - டிசம்பர் (44) தம்பதியினர். இவர்களது மகள் கீர்த்தனா (23). இவர் மஞ்சாகுப்பத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அன்பழகன் வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அன்பழகன், கீர்த்தனா ஆகியோரை வீட்டை விட்டு வெளியேறுமாறு, அன்பழகனின் தாய், தகப்பனார், இளைய மகன் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஒரே வீட்டில் தனிக்குடித்தனம்
வீட்டை விட்டு வெளியேற மறுத்த கீர்த்தனா, அதே வீட்டிலேயே தனிக்குடித்தனம் செல்லப் போவதாக, தனது தாயார் டிசம்பரிடத்தில் கூறியுள்ளார். இதனையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கேஸ் அடுப்பு, சிலிண்டர் ஆகியவற்றை, கீர்த்தனாவின் தாயார் அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
இருப்பினும் ஒரே வீட்டில் தனியாக சமைக்கக் கூடாது என மாமியார், மருமகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா, வீட்டின் கதவைத் தாழிட்டுக் கொண்டு சேலையில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார். தகராறு குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த கீர்த்தனாவின் தாயார், உறவினர்கள், கீர்த்தனா தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கீர்த்தனாவின் தாயார் திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
உயிரிழந்த இளம்பெண்ணின் கணவர் கைது
தகவலறிந்து சம்பவ் இடத்துக்கு வந்த ஆய்வாளர் நாகலிங்கம் தலைமையிலான காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, கீர்த்தனாவின் கணவர் அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜீவனாம்சம் கேட்டு மகன் கடத்தல்: காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்!