திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டில் பவுன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் (40). தனது அண்ணன் மகனான காவிய செல்வன் வயது 15 என்பவரை தன் வீட்டில் வளர்த்து பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்க வைத்துள்ளார்.
நேற்று காலை வழக்கம்போல் காவியச் செல்வன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சக மாணவர்களுடன் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் இதைக்கண்டு கோபமடைந்து மாணவனைத் அழைத்து கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் உடல் முழுதும் காயங்களுடன் மாலை வீடு திரும்பாமல் பள்ளியின் வெளியே படுத்துக் கொண்டிருந்துள்ளார். இரவாகியும் மகன் வீடு திரும்பாததால் மாணவனைத்தேடி சித்தப்பா பள்ளி அருகே சென்று பார்த்தபோது மகன் படுத்துக் கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் மாணவனிடம் கேட்டபோது, தன்னை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கியதைக் கூறி அழுதுள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாணவனின் சித்தப்பா நடராஜன் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோல் அப்பள்ளியில் நடைபெறாமல் இருப்பதற்கு, தலைமை ஆசிரியர் மீது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்த ஆண்டு புதிதாக மூன்று மருத்துவக் கல்லூரிகள்' - அமைச்சர் விஜய பாஸ்கர்