திருவள்ளூர் தனியார் அரங்கம் ஒன்றில் 4ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருமணத்தில் இணையும் மாற்றத்திறனாளிகள் ஜோடிகள் நீண்ட காலம் வாழ வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் " என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களை அறிமுகப்படுத்தி எப்படிப்பட்ட வாழ்க்கை துணை தேவை என்பதை தெரிவித்தனர். அப்போதே இரு தரப்பினரும் பேசி முடிவு செய்தனர். இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 15 ஜோடிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மலர் தூவி வாழ்த்தினார்.
இந்த ஜோடிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது.