திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகம், கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை இணைக்கும் வகையில் 139 கிலோமீட்டர் தொலைவில், சென்னைக்கு வெளிவட்ட சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்துதல், சாலை அமைத்தல் பணிகளுக்கு 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் திருவள்ளூர் பைப்பாஸ், ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஆறுவழிச்சாலை அமைக்க ஆயிரத்து 420 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி, இரும்புத்தாது, இயற்கை எரிவாயு, ரசாயனம், கச்சா எண்ணெய், உள்ளிட்டவைகளை எளிதாக கொண்டுச் செல்வதற்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் நுழையாமல் ஆந்திரா செல்வதற்கும் 20 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

ஒருவழி சாலையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் - திருவள்ளூர் நெடுஞ்சாலை, கடந்த 2009ஆம் ஆண்டு இருவழி சாலையாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது அமைக்க உள்ள வெளிவட்ட சாலையால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்படுகிறது.

அதற்கான அளவீடு செய்யும் பணிகளை அரசு ஊழியர்கள் மேற்கொண்டபோது, செங்காடு கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகள் வெளிவட்ட சாலையால் பாதிக்கப்படுவதுடன் இக்கிராமத்தில் உள்ள மாமரம், புளிய மரம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இன்று அளவீடு செய்ய வந்த ஊழியர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு இடத்தையும் உரிய இழப்பீடும் உடனடியாக வழங்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.