பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அவற்றைக் கையாளுவது குறித்து காவல் துறையினருக்கான பயிற்சி முகாம் திருவள்ளூரில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜெயஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயஸ்ரீ, "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.
காவல் நிலையங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி காவலர்கள் பணியில் இருப்பார்கள்.
அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு பேட்ஜ் வழங்கப்பட்டிருக்கும். அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால், அவ்வழக்கை அவர்கள் முறையாக கொண்டுசெல்வார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே தற்போது நியமிக்கப்பட்டவர்கள் ஒரு பாலமாகச் செயல்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து தீர்வு வழங்க ஏதுவாக அவர்கள் வழக்கை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருப்பார்கள்" என்றார்.
இதையும் படிங்க: நாட்டில் சராசரியாக நாளொன்றுக்கு 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு