திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் தனது நண்பர்களுடன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) இரவு அப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார். அங்கு, ஏற்பட்ட தகராறில் எதிர் தரப்பினரை ஆகாஷ் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தாக்கியதைத் தொடர்ந்து அவர் அப்பகுதியிலுள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் நண்பர்களுடன் இரவு காட்சி பார்த்துள்ளார். பின்னர், அவர் அங்கிருந்து வெளியே வந்தபோது திரையரங்கு வாசலில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த எதிர்தரப்பினர் ஆகாஷ் மற்றும் அவருடைய நண்பர்களை அரிவாளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளாலும் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணவாள நகர் காவல் துறையினர், தலைமறைவான ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ராகுல் (21), பிரவீன் ராஜ் (22), பாலசுப்பிரமணி (21), யுவராஜ் (19), விக்னேஷ் (20), ஹரிஷ் குமார் (17) உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாகவுள்ள வெங்கடேசன் (25) என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த ஆகாஷ் உள்ளிட்ட நண்பர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர்.
இதையும் படிங்க: ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு.. பதறவைக்கும் பட்டப்பகல் காட்சிகள்...