1966ஆம் ஆண்டு பின்னணி பாடகராக தனது இசைப்பயணத்தை தொடங்கிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படம்வரை பாடியுள்ளார். எம்.ஜி.எம். மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் செப். 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பாடும் நிலா பாலு என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அவரது மரணம் திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் உடல் காம்தார் நகரிலுள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று (செப்.25) வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு நேற்று கொண்டுசெல்லப்பட்டது. ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்தது. இருப்பினும் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்த ரசிகர்கள் கூட்டமாக வந்ததால், வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் க. பாண்டியராஜன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, நடிகர் விஜய் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் பாரதிராஜா, அமீர், இசையமைப்பாளர்கள் தினா, தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி.யின் வீ்ட்டு முறைப்படி அவரது மகன் சரண் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்தார்.
பின்னர் அனைவரது கண்ணீர் அஞ்சலியுடன், அணிவகுப்பில் நின்ற காவல்துறையினர் துப்பாக்கியால் 78 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "காலை 5 மணி முதல் காவலர்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்டனர். இரண்டாயிரத்து மேற்பட்ட நபர்கள் எஸ்.பி.பி.யின் உடலைப் பார்த்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பண்ணை வீட்டுக்குள் நுழைபவர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியைப் பின்பற்றி நடந்தார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு ஏன் தேசியக்கொடி போர்த்தப்படவில்லை? - காவல் அலுவலர் விளக்கம்