திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம், திருப்பாச்சூர் அருகே தனியார் விடுதிகளில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
அந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் உள்ளிட்ட உபாதைகளினால் அவதிப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.
துரைமுருகன் பேசிய 14 நிமிட வீடியோ
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எட்டு ஊழியர்கள் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் குழுக்களில் வதந்தி பரவியதை அடுத்து திருவள்ளூர் புதுச்சத்திரம் திருப்பாச்சூர், காஞ்சிபுரம் மாவட்ட சாலைகளை மறித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், அதில் ஒன்பது பெண் ஊழியர்கள் இறந்துவிட்டதாகவும் இதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஊடகங்களும் உண்மையான செய்தியையும் வெளியிடவில்லை எனத் தனது சாட்டை யூ-ட்யூப் வலைதளத்தில் துரைமுருகன் பேசிய 14 நிமிட வீடியோ வெளியிட்டிருந்தார்.
பொது அமைதிக்குக் குந்தகம்
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறை சார்பில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்விதமாக சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்புவது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
காவல் துறையினர் தனிப்படை அமைத்து யூ-ட்யூபர் துரைமுருகனைத் தேடிவந்த நிலையில் திருச்சி காவல் நிலைய காவல் துறையினர் உதவியுடன் யூ-ட்யூபர் துரைமுருகன் நேற்று (டிசம்பர் 19) இரவு 9 மணி அளவில் திருச்சியில் கைதுசெய்யப்பட்டார்.
இதனை அடுத்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட யூ-ட்யூபர் துரைமுருகன், திருவள்ளூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையில் திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் நாகலிங்கம், உதவி ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட காவல் துறையினர் இன்று காலை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.