திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது. வருவாய்த் துறை அலுவலர்களுடன் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையேற்றார்.
பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,’’வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் தள்ளுபடி ஏதும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக அறிவுரைகள் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டா வழங்குவதில் சிரமங்கள்
திருவள்ளூரில் ஏரிகள் நிறைந்துள்ளதால், பட்டாக்கள் வழங்குவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. நீர்நிலை புறம்போக்கு என்ற வகைப்பாடு கொண்ட இடங்களும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களும் கண்டறிப்பட்டுள்ளன. இதனால் அங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டாக்கள் வழங்குவதில் அதிக சிரமங்கள் உள்ளன.
பால்வளத் துறை அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கி, வேண்டுகோள்கைளை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பட்டாக்களை வழங்குவதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மாவட்டத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக மக்கள் தொகை உள்ளதால் வட்டாட்சியர் முதல் அனைவருக்கும் பணி சுமை அதிகளிவில் உள்ளது என்பது தெரியவருகிறது. அதையும் நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி சேர்க்கை
பள்ளி சேர்க்கை நடைபெறுவதால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வருவாய், சாதி சான்றிதழ்கள் வழங்க மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித் துறையின் முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர்களிடம் ஒரு சில நாள்களில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் கிராமங்களில் உள்ள மக்களிடம் இணைந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், பட்டாக்களில் உள்ள தவறுகளைத் திருத்தம் செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பட்டா நகல் எளிமையாகப் பெற புதிய இணையதளம் தொடங்கி வைப்பு