திருவள்ளூரில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அம்மாவட்டம் முழுவதையும் கடும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் விதம் நியமிக்கப்பட்டும், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 350 கட்டுப்பாட்டு குழு மூலம் ஆய்வுப் பணி நடைபெறுகிறது.
காய்ச்சல், சளி, இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி உள்ள தாய்மார்கள், சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் 102, 104 அவசர கால ஊர்தி மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் இருக்கின்றதா என உறுதி செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுவருகின்றது. ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆண் குழந்தைக்கு, 'கரோனா' என பெயரிட்ட ஊர்க்காவல் படை வீரர்!