திருவள்ளூர் அடுத்து கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் பஜார் வீதியில் முக்கிய சாலையில் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டி வியாபாரம் செய்து வந்துள்ளனர். பஜார் வீதி என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பேரம்பாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஸ்வீட் கடை, செருப்புக்கடை, துணிக்கடை, நகைக்கடை , குடிசைகள் அமைத்து வைக்கப்பட்ட காய்கறி பழக்கடை, பூக்கடை போன்ற பல்வேறு விதமான கடைகள் நடத்தி வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகளும் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அகற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் , திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் வட்டார வளர்ச்சி துறையினர் ஆகியோர் காவல்துறையின் பாதுகாப்போடு ஆக்கிரமித்த பகுதிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். ஏற்கெனவே பல முறை நோட்டீஸ் கொடுத்தும் கடையை காலி செய்யாததால் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் ஆக்கிரமிப்புக் கடைகளை, இடித்து தள்ளிய இடத்தில், முற்றிலும் சுத்தம் செய்யாத பகுதியில், தற்போது மீண்டும் சிலர் கடைகள் வைத்துள்ளனர். இது பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, சம்பிரதாயத்திற்காக ஒரு நாள் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு வருவாய்த்துறையினர், அதன்பிறகு கண்டுகொள்ளாதது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:இலவசம் என விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல்... பி.ஆர்.பாண்டியன்